Home

Cine News

Previews

Reviews

Top 10

Articles

Gallery

Forums

Upcoming

Classifieds

 

 

 
 

 

FETNA'S SILVER JUBILEE, 25TH YEAR CONVENTION, JULY 6-8, BALTIMORE

 

 


அன்புத் தமிழ் உறவுகளுக்கு,

வணக்கம்! வரும் புத்தாண்டில் உங்கள் உள்ளமும் இல்லமும் நிறைந்து வாழ என் வாழ்த்துகள்! தரணி போற்றும் ஆயிரமாயிரம் திருநாள் வந்து போனாலும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்தான் தமிழர்களின் மகுடம் என்பது யாவரும் அறிந்ததே. தமிழர் பண்பாடு கலை மற்றும் நம் கலாசாரத்தின் அத்தனை பதிவுகளையும் உள்ளடக்கிய இந்தப் பொங்கல் திருநாளை ஒன்று கூடி நாம் கொண்டாடி மகிழ்வோம்! ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறி வளமுடன் வாழ்வோம்!

தமிழறிஞர் முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக மலர இருக்கும் நமது பேரவையின் வெள்ளிவிழா, பால்ட்டிமோர் சமூக அரங்கில் (The Baltimore Convention Center) நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளி விழாவின் ஒருங்கிணனைப்பாளர் திரு. பாலகன் அவர்களோடு வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க அன்பர்கள் அனைவரும் விழா ஏற்பாடுகளில் தங்களை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் தேசிய அளவில் உள்ள நம் பேரவை நண்பர்களும் ஆர்வமாக அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். எனவே, நீங்களும் உங்களால் முடிந்த அளவுக்கு வெள்ளி விழாவின் ஆக்கப் பணிகளுக்கு ஊக்கமளித்திட அன்புடன் வேண்டுகிறேன். பேரவையின் வெள்ளி விழா பற்றி உங்கள் உள்ளூர் தமிழ்ச் சங்க உறவுகளுக்குச் சொல்லி அவர்கள் அனைவரையும் அவசியம் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

எதிர்வரும் நம் பேரவையின் 25 ஆம் ஆண்டு விழா வழக்கமான விழாவாக அல்லாமல் வரலாறு படைக்கும் வெள்ளிவிழாவாக அமையவுள்ளது. அந்த அளவுக்குச் சிறப்பாக நடைபெற உள்ள இவ் விழாவின் முன்னேற்பாடுகளில் இப்பொழுதே உங்களை இணைத்துக் கொள்ளுமாறு இருகரம் கூப்பி அழைக்கிறேன். விழா பற்றிய மேலதிக செய்திகளுக்கு அவ்வப்போது www.fetna.org எனும் நமது இணையதளத்திற்குச் சென்று பார்த்துப் படித்து அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

தாய்த் தமிழகத்தில் அரைப் புள்ளி, காற்புள்ளி எனத் தொடர்ந்து கொண்டே வந்து தொல்லை கொடுத்த முல்லைப் பெரியாறு பிரச்சனை இன்று கேள்விக் குறியாய் வளைந்து ஆச்சரியக் குறியாய் எழுந்து நின்றுள்ளது. இதற்கு இத்துடன் முற்றுப் புள்ளி வைப்போம். அணையை உடைக்க நினைக்கும் மக்களின் அறியாமையை உடைப்போம். நிரந்தரத் தீர்வு காண இந்திய நடுவண் அரசை நம் பேரவை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு நம் பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறது.

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளோடு,

பழனி சுந்தரம்
தலைவர்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

 

Tamilpakkam wishes the convention a great success!
 

 

 

 


 

 

 

 

 

 

 

The views expressed in the article are the author's and not of Tamilpakkam.com